கடலூர் – சிதம்பரம் சாலையில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் 50% தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சிப்காட் வளாகத்தில் குடிகாடு அருகே ‘கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட்’ என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிஃப்ட் அடிப்படையில் இந்த ஆலைக்குத் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று (13.05.2021) காலை இந்த ஆலையின் இரண்டாவது தளத்தில் தொழிற்சாலையின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் பாய்லரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென்று பரவிய தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது. அங்கிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த விபத்தில் பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (42), செம்மங்குப்பம் கருணாகரன் மகன் கணபதி (25), காரைக்காடு செந்தில்குமார் மனைவி சவீதா (35), 25 வயதுடைய பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 4 பேர் தீக்காயங்களாலும், மூச்சுத் திணறலாலும் உயிரிழந்தனர்.
மேலும், ஆபத்தான நிலையில் படுகாயம், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 20 பேர் மீட்கப்பட்டு கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு காலை பணியில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களைக் காப்பாற்ற சென்ற சிலருக்கும் அங்கிருந்த ரசாயன தெளிப்பின் காரணமாக கை, கால்களில் காயம் ஏற்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். உடனடியாக தொழிற்சாலையை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பதற்றம் நிலவியது. மேலும் இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கரும்புகையுடன் ஆலை காட்சியளிக்கும் நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வருவோரை அரசு மருத்துவமனையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.