கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுப்புறங்களில் கடும் மாசு: நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இந்து தமிழ்

7 March 2021: கடலூர் தொழிற்பேட்டையால் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாசுவுக்கு காரணமான தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பத்தை சேர்ந்த மீனவர் எஸ்.புகழேந்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் 20 தொழிற்பேட்டைகளையும், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் சிப்காட் நிறுவனம் அமைத்துள்ளது. கடலூரிலும் ஒரு தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. அங்கு 22 ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் ரசாயன பொருட்கள், மருந்துகள், மின்உற்பத்தி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தப் பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் கூட்டமைப்பான ‘சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு” கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், தொடர்புடைய பகுதியில் காற்று மாசு ஏற்பட்டிருப்பதாகவும், காற்றில் ரசாயனங்கள் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவை விட குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் இருப்பது தெரிய வந்தது.

எனவே அங்கு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தமிழக அரசு தடுக்க உத்தரவிட வேண்டும். தங்களது கடமையை செய்யத் தவறிய, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சிப்காட் மற்றும் தொழிற்சாலை சங்கங்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை விரிவாக ஆய்வுசெய்ய மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மூத்த விஞ்ஞானி, திருச்சியில் என்ஐடி வேதியியல் பேராசிரியர், பெங்களூர் ஐஐஎஸ் வல்லுநர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகிய 6 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிலத்தடி நீர் மற்றும் காற்று எந்த அளவுக்கு கன உலோகங்கள் போன்ற ரசாயனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வையும், இப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய செயல் திட்டத்தையும், மாசுபாட்டுக்கு காரணமாக இருந்த தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து 6 மாதத்துக்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாசுபட்ட பகுதியை சீரமைக்க தமிழக அரசு செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். மாசுபடுத்திய நிறுவனங்களை கண்டறிந்து, அவை மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு ஏற்படுத்தியதற்கான அபராதத்தையும் விதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Fair Use Statement

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுப்புறங்களில் கடும் மாசு: நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Scroll to top